2004-ம் ஆண்டில் நடந்த 3 பேர் கொலை வழக்கில் ரவுடிகள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

2004-ம் ஆண்டில் நடந்த 3 பேர் கொலை வழக்கில் ரவுடிகள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-01-31 23:15 GMT
திருச்சி,

திருச்சியில் பிரபல ரவுடிகளாக வலம் வந்த சேட்டு என்கிற இருதய ராஜ், டிங்கி என்கிற ஆரோக்கியராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் கடந்த 26-7-2004 அன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். திருச்சி-மதுரை மெயின்ரோட்டில் மணிகண்டம் அருகே ஒரு அரிசி ஆலை எதிரே பட்டப்பகலில் காலை 9.30 மணி அளவில் இந்த 3 பேர் கொலை சம்பவம் நடந்தது. இதில் சேட்டுவின் தலையை கொலையாளிகள் தனியாக வெட்டி எடுத்து வயல் வெளியில் போட்டு விட்டு சென்றனர்.

அப்போது திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த 3 பேர் கொலை தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இன்னொரு ரவுடி கோஷ்டியின் தலைவனான முட்டை ரவி மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து 3 பேரையும் கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவத்துக்கு ஒரு வருடத்திற்கு முன் சேட்டுவின் தம்பி குட்டை ஜேம்ஸ் என்பவர் திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் முட்டை ரவி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் சேட்டுவும் அவரது கூட்டாளியான டிங்கியும் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக ஒரு காரில் வந்த போது தான் முட்டை ரவி கோஷ்டியினர் இந்த பயங்கர கொலை சம்பவத்தை அரங்கேற்றினர்.

மணிகண்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் அந்த காரில் ‘லிப்ட்’ கேட்டு திருச்சிக்கு வந்த போது ரவுடிகளின் அரிவாளுக்கு அவரும் இரையானார்.

இது தொடர்பாக முட்டை ரவி, குணா என்கிற குணசீலன், ஆனந்த் என்கிற முனி ஆனந்த், ஆசாரி என்கிற ஏசுதாஸ், மாதவன், சுந்தரபாண்டி, தட்சிணாமூர்த்தி, முருகன் என்கிற துரைமுருகன், ஜெயக்குமார், மனோகரன், ரவி என்கிற குட்ஷெட் ரவி, கமல் என்கிற தண்டாயுதபாணி ஆகிய 12 பேரை மணிகண்டம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்த காலகட்டத்தில் ரவுடி முட்டை ரவி திருச்சி மாநகர போலீசாரால் ‘என்கவுண்ட்டர்’ செய்யப்பட்டார். முனி ஆனந்த், ஜெயக்குமார் ஆகிய இருவரும் இறந்துவிட்டனர்.

எனவே இறுதியாக 9 பேர் மீது கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ரவுடிகளான குணா, சுந்தரபாண்டி, மற்றும் முருகன், மனோகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், 4 பேருக்கும் தலா ரூ.17 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் ஒவ்வொருவருக்கும் மேலும் தலா 6 மாதம் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி பி. கார்த்திகேயன் தீர்ப்பு கூறினார். மற்ற 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ரவுடிகள் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டதால் திருச்சி கோர்ட்டு வளாகத்தில் நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரவுடிகளின் கூட்டாளிகள் பலர் தண்டனை பெற்ற ரவுடிகளை பார்ப்பதற்காக கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்