பிளாஸ்டிக் தடை எதிரொலி, துணிப்பையின் தேவை அதிகரிப்பு வீட்டில் இருந்தபடியே வருவாய் ஈட்டும் பெண்கள்
பிளாஸ்டிக் தடை எதிரொலியால் துணிப்பையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வீட்டில் இருந்தபடியே பெண்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள்.
கோத்தகிரி,
சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதலே 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் இடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. மேலும் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களை சோதனை சாவடிகளிலேயே தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு குறைந்தது. பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் இடையே துணிப்பைகள் பயன்பாடு அதிகரித்து உள்ளது. பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்களில் பொருட்களை துணிப்பைகளில் கொடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவது கட்டாயமானது. இதனால் அதன் தேவை அதிகரித்து வருகிறது. எனவே பெண்கள் பலர் வீட்டிலேயே குடிசை தொழிலாக துணிப்பைகளை தைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதை குடிசை தொழிலாகவும், பகுதிநேர தொழிலாகவும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தைக்கும் துணிப்பைகள் அளவுக்கு தகுந்தவாறு 4 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்தபடியே பெண்கள் வருமானம் ஈட்ட முடிகிறது.
மளிகை பொருளை கடைக்காரர்கள் பழைய செய்தித்தாள்களில் சுற்றி கொடுக்கிறார்கள். இதனால் பழைய செய்தித்தாளின் விலையும் உயர்ந்து உள்ளது. எனினும் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து மாற்று பொருளுக்கு மாறிவிட்டனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.