போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விநாயகர் கோவிலை இடிக்கும் பணி தடுத்து நிறுத்தம்

மேல்மலையனூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விநாயகர் கோவிலை இடிக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-31 22:30 GMT
மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே வளத்தியில் ஆற்காடு-விழுப்புரம் சாலையில் பழமைவாய்ந்த ஏழைவிநாயகர் கோவில் உள்ளது. சமீபத்தில் இந்த சாலை நெடுஞ்சாலைத்துறை மூலம் அகலப்படுத்தப்பட்டது. அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விநாயகர் கோவிலை அகற்றாமல், சாலையை விரிவுப்படுத்தி சென்றனர்.

இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விநாயகர் கோவில் இருப்பதாக கூறி, அதனை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். அதன்அடிப்படையில் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரபுராஜன் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று மதியம் விநாயகர் கோவிலை இடிக்க ஆயத்தமாகினர். முன்னதாக வளத்தி போலீசார் பாதுகாப்புக்காக கோவில் அருகே குவிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விஜயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி துரைசங்கர் ஆகியோர் தலைமையில் விநாயகர் கோவிலுக்கு திரண்டு வந்து, கோவிலை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் நெடுஞ்சாலைத்துறையினரிடம் புதிய விநாயகர் கோவில் கட்ட மாற்று இடமும், ரூ.10 லட்சமும் கொடுத்து விட்டு, கோவிலை இடித்து அகற்றுமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கோவிலை இடிக்க மாட்டோம் என்று கூறிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்