உயரழுத்த மின்சாரத்தை கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
உயரழுத்த மின்சாரத்தை கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மங்கலம்,
மங்கலத்தை அடுத்த பரமசிவம்பாளையம், வலையபாளையம், நடுவேலம்பாளையம், சுக்கம்பாளையம் போன்ற பகுதிகளில் பவர்கிரிட் அதிகாரிகள் உயர்மின் கோபுரங்கள் அமைக்க அளவீடு செய்வதும், அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதிகாரிகள் அளவீடு பணிகளை நிறுத்தி விட்டு செல்வதும் சமீபத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று பரசிவம்பாளையம் பகுதியில் நிலத்தை அளவீடு செய்ய பவர் கிரிட் அதிகாரிகள் வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மங்கலத்தை அடுத்த பள்ளி பாளையம் அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு உயர் அழுத்த மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கொங்குராஜாமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி வரவேற்றார். கூட்டத்தில் கே.ஜி.பாலசுப்பிரமணியம், பார்த்த சாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
உயர்மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உயர்மின்கோபுரம் அமைந்த இடத்திற்கும், கம்பி வடம் செல்லும் பாதைக்கும் ஆண்டு வாடகை வழங்க வேண்டும். தமிழகத்தில் உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சாலையோரமாக கேபிள் பதித்து உயரழுத்த மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகளின் நிலங்களில் மின்கோபுரம் அமைக்க அளவீடு செய்ய அதிகாரிகள் வரும்போது எதிர்ப்பு தெரிவித்து, அளவீடு பணிகளை தடுத்துநிறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.