பழனி அருகே பரபரப்பு, பள்ளி பஸ் மீது லாரி மோதல் - 5 மாணவர்கள் காயம்
பழனி அருகே பள்ளி பஸ் மீது லாரி மோதியதில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். அதிவேகமாக வாகனங்கள் செல்வதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீரனூர்,
பழனியை அடுத்த தொப்பம்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி பிரிவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் ஒன்று புதுதாராபுரம்-பழனி சாலையில் சென்று கொண்டிருந்தது.
கந்தப்பகவுண்டன்வலசு அருகே சென்றபோது மாணவர்களை இறக்கிவிடுவதற்காக சாலையோரத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பஸ்சில் இருந்து மாணவர்களும் கீழே இறங்கி கொண்டிருந்தனர். அப்போது பின்னால், தொப்பம்பட்டியில் இருந்து பழனி நோக்கி வந்த டிப்பர் லாரி பள்ளி பஸ்சின் மீது மோதியது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே விபத்து குறித்து அறிந்த கந்தப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பழனி-புதுதாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனை தடுக்க கந்தப்ப கவுண்டன்வலசு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.