மும்பை ஓஷிவாராவில் டி.வி. நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

மும்பை ஓஷிவாராவில் டி.வி. நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-01-30 22:28 GMT
மும்பை,

மும்பை ஓஷிவாராவை சேர்ந்தவர் ராகுல் திக்சித் (வயது28). டி.வி. நடிகர். அண்மைகாலமாக டி.வி.யில் நடிக்க அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் அவர் சத்தமும் கொடுக்கவில்லை, கதவையும் திறக்கவில்லை.

தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது ராகுல் திக்சித் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. டி.வி.யில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்