காங்கிரசாரின் விமர்சனத்தை இனிமேல் சகித்துக்கொள்ள மாட்டேன் தேவேகவுடா எச்சரிக்கை
இனி காங்கிரசாரின் விமர்சனத்தை சகித்துக்கொள்ள மாட்டேன் என்று தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் முதல்-மந்திரி குமாரசாமியை தொடர்புகொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதுபோல் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தினமும் பேசுகிறார்கள். காங்கிரஸ் கொடுத்த பட்டியலில் ஒரு வாரியத்தை தவிர மற்ற வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்துள்ளோம்.
நடந்து கொள்வீர்கள்
ஆட்சி நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று எங்களுக்கு தெரியவில்லை. எத்தனை நாட்கள் தான் இவ்வாறு நடந்து கொள்வீர்கள்?. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ஒவ்ெவான்று பேசுகிறார்கள். நாங்கள் இப்போது இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறோம்.
நாட்டில் சில கூட்டணி அரசுகள் அமைந்துள்ளன. நானும் காங்கிரசின் ஆதரவில் பிரதமரானேன். தரம்சிங் ஆட்சியில் கூட்டணி நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தரம்சிங் அரசு கவிழ நானோ அல்லது குமாரசாமியோ காரணமல்ல. இப்போது காங்கிரஸ் ஆதரவில் குமாரசாமி முதல்-மந்திரி ஆகி இருக்கிறார்.
சோனியா காந்திக்கு அழுத்தம்
தனக்கு ஏற்பட்ட வேதனை காரணமாக, முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக குமாரசாமி கூறினார். எங்கள் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் தான்(சித்தராமையா) எந்த பணிகளையும் செய்யவில்லை. அப்போது எனக்கு ஏற்பட்ட வலி, கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
சோனியா காந்திக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், நான் முதல்-மந்திரி ஆகி இருப்பேன் என்று அவர் (சித்தராமையா) அடிக்கடி சொன்னார். கூட்டணி ஏற்பட்டபோதும், என்னையே மீண்டும் முதல்-மந்திரியாக்கி இருக்கலாம் என்று அவர் கூறினார்.
குமாரசாமி முதல்-மந்திரியானார்
அப்போது காங்கிரசில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யார் ஆட்சியை நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. சோனியா காந்தியின் பிரதிநிதிகள் வந்து, குமாரசாமியை முதல்-மந்திரியாக்கினால் ஆதரவு வழங்குவதாக கூறினார்கள். இதனால் காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பப்படி குமாரசாமி முதல்-மந்திரியானார்.
கூட்டணி அரசு பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அதை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். அதற்கு தக்க பதில் கொடுப்பேன். காங்கிரசார் தொடா்ந்து எங்களை விமர்சித்து பேசினால், நிலைமை கைமீறி போய்விடும்.
விமர்சனம் செய்யவில்லை
இனி காங்கிரசாரின் விமர்சனத்தை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். அவரை பற்றி நாங்கள் எந்த விமர்சனமும் செய்யவில்லை. குமாரசாமி இதுவரை எல்லை மீறி பேசியது இல்லை.
ஒரு முறை மட்டும், நான் குமாஸ்தாவை போல் பணியாற்றுவதாக கூறினார். அது உண்மை. ஆனால் அது, ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் அவர் தனிப்பட்ட முறையில் கூறியது. கூட்டணி அரசை நடத்துவது எவ்வளவு கடினமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கவே அவர் அவ்வாறு கூறினார். அந்த வார்த்தையின் பின்னணியில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.