பாளையங்கோட்டையில் துணிகரம் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை மர்மநபருக்கு வலைவீச்சு
பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
நெல்லை,
பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியில் சீயோன் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 62). இவர் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி நளினி (54). இவர் சங்கர்நகர் இந்தியா சிமெண்டு ஆலை நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஜான்சிராணி, சொரூப ராணி என 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணமாகி விட்டது. ஜான்சிராணி திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகிறார். சொரூபராணி, கணவருடன் தாழையூத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்து இருந்தார்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தூங்கி கொண்டு இருந்தனர். அதிகாலை 2 மணி அளவில் மர்மநபர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். அவர், சாமுவேலின் கை, கால்களை அங்கிருந்த துணிகளால் கட்டிப்போட்டார். நளினியையும், சொரூப ராணியையும் பக்கத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினார்.
சாமுவேலிடம், அந்த மர்மநபர் பீரோ சாவி எங்கே? என்று கேட்டார். அவர் கூற மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்மநபர் இரும்பு கம்பியால் சாமுவேலை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, தலையில் ரத்தம் வழிந்தது. சாமுவேல் சாவி இருக்கும் இடத்தை காட்டினார்.
அந்த மர்மநபர், வீட்டில் இருந்த 3 பீரோக்களையும் திறந்தார். அதில் உள்ள துணிகள், பொருட்களை தூக்கி வீசினார். பீரோவில் இருந்து 6 கிராம் எடையுள்ள 3 சிறிய தங்க மோதிரம், ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தார். மேலும் வீட்டில் இருந்து சில ஆவணங்களையும் திருடியதாக தெரிகிறது. பின்னர் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிமுருகன், நாகராஜன், கோல்டன் சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் சாமுவேல் வீட்டை நோட்டமிட்ட மர்மநபர், வீடு புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு ‘புளூட்டோ‘ மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு மெயின்ரோடு வரை சென்றது. பின்னர் வீட்டுக்கே திரும்பி வந்தது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, பீரோ உள்ளிட்டவற்றில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, வீரமாணிக்கபுரம் பகுதியில் வங்கி அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன அதிகாரிகள், தொழில் அதிபர்கள் வசித்து வருகிறார்கள். இரவு 8 மணிக்கு மேல் இந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகி விடும். சில நேரங்களில் தெருவிளக்கு கூட சரியாக எரிவது இல்லை. போலீசாரும் இந்த பகுதியில் ரோந்து பணிக்கு வருவது இல்லை. ஏற்கனவே இந்த பகுதியில் 2 வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் இரவு நேரத்தில் இங்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்“ என்றனர்.
இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கொள்ளை சம்பவங்களை தடுக்க ஏற்கனவே தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. வீரமாணிக்கபுரம் பகுதியிலும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க அந்த பகுதியை கூடுதலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சாமுவேல் வீட்டு கொள்ளையில் ஈடுபட்டது அவருக்கு தெரிந்த நபராக இருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் எதையும் தற்போது உறுதியாக சொல்ல முடியாது. இறுதிகட்ட விசாரணைக்கு பிறகு உண்மை தெரியும்“ என்றார்.