மானூரில் அரசு பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்
மானூரில் அரசு பஸ்கள் மோதிக் கொண்டதில், 10 பேர் காயம் அடைந்தனர்.
மானூர்,
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருந்து நெல்லையை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ் மானூர் பஸ்நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. அப்போது களக்குடியில் இருந்து நெல்லையை நோக்கி வந்த மற்றொரு அரசு டவுன் பஸ்சும், அதே நிறுத்தத்தில் நிற்பதற்காக வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்று கொண்டிருந்த அந்த பஸ் மீது டவுன் பஸ் மோதியது. இதில் 2 பஸ்களில் இருந்த 10 பயணிகள் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் ஒரு பஸ்சில் முன்புறமும், மற்றொரு பஸ்சில் பின்புறமும் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண் நாராயணன், செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த 4 பெண்கள் உள்பட 7 பேரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயம் அடைந்த சிலர், ஆட்டோ மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். மேலும் 2 பஸ்களில் வந்த மற்ற பயணிகள், மற்றொரு பஸ்சில் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அரசு டவுன் பஸ்சில் பிரேக் சரியாக பிடிக்காததால், முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு அரசு பஸ்சின் மீது மோதியது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் மானூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.