புதுப்பிக்கப்பட்ட ரோமன்ரோலண்டு நூலகம் நாராயணசாமி திறந்துவைத்தார்
புதுப்பிக்கப்பட்ட ரோமன் ரோலண்டு நூலகத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார்.
புதுச்சேரி,
ரோமன் ரோலண்டு நூலகம் 1827-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் தலைமை நூலகமாக தொடங்கப்பட்டது. பழமையான இந்த நூலகம் தமிழ், பிரெஞ்சு, இந்தி, மலையாளம், தெலுங்கு மொழியில் சுமார் 4 லட்சத்து 2 ஆயிரத்து 406 புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த நூலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் அதை ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகள் நடந்தன. கட்டிட புனரமைப்பு, நவீன மரப்பொருட்கள், மாற்று திறனாளிகளுக்கான பிரத்யேக பொருட்கள், மின்இணைப்புகள், குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட நூலக திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் வரவேற்று பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு நூலகத்தை திறந்துவைத்து பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ரோமன் ரோலண்ட் நூலகத்துக்கு தினந்தோறும் ஆயிரம் வாசகர்கள் வருகை தருகின்றனர். சுமார் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் சமீபத்தில் 2 ஆயிரம் புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் புதுவையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் பயனடைவர். தற்போது இங்கு 10 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டு அவை அனைத்துக்கும் இணையதள வசதி வழங்கப்பட்டுள்ளது.
மழலையர்கள் பிரிவில் 50 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 8 ஆயிரத்து 500 குழந்தைகள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்த நூலகத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
விழாவில் கலை, பண்பாட்டுத்துறை செயலாளர் பிரசாந்த்குமார் பாண்டா, உதவி நூலக தகவல் அதிகாரி ஜெஸ்லின் நோரொனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.