ஆம்புலன்ஸ் வசதி கேட்டு சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 60 பேர் கைது
காரைக்கால் அருகே ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால்,
காரைக்கால் அருகே உள்ள விழிதியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதாரநிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்துக்கு நிரவி-திருமலைராயன்பட்டினம் தொகுதி செயலாளர் விடுதலை கணல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வணங்காமுடி உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் விழிதியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதியை உடனே ஏற்படுத்திதரவேண்டும். 24 மணி நேர சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் தரமான மருத்துவ வசதியை உறுதி செய்ய வேண்டும். நியாய விலைக்கடைகளில் மாதாந்திர அரிசியை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 60 பேரை நிரவி போலீசார் கைது செய்தனர்.