மகாத்மா காந்தி நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை

காந்தியின் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2019-01-30 22:45 GMT
புதுச்சேரி, 

மகாத்மா காந்தியின் நினைவு தினம் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கூட மாணவ, மாணவிகளின் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் கந்தவேலு, தார்செம்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அமைச்சரும், புதுவை காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் தலைமையில் காந்தியின் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறிதுநேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், சமூக நல ஆலோசனை வாரிய தலைவி வைஜெயந்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் வீரமுத்து, கணேசன், கல்யாணசுந்தரம், பிரேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு தினமாக காந்தியின் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சாரம் அவ்வை திடலில் மதச்சார்பின்மை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், காந்தியவாதி சுந்தர லட்சுமிநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் வீராம்பட்டினம் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதையடுத்து சாமிநாத நாயக்கர் வீதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சக்தி திட்டம் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்