கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்

கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 மாடி கட்டிடத்தை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

Update: 2019-01-30 23:00 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் நகர் பகுதியில் உரிய அனுமதியின்றியும் விதிகளை மீறியும் கட்டப்பட்ட கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைக்கவும், மின் இணைப்பை துண்டிக்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் மின் வாரியம் சார்பாக அனுமதியின்றி கட்டப்பட்ட 9 வணிக வளாகங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அத்துடன் வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் என 43 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.

இதற்கிடையே கொடைக்கானல்- வத்தலக்குண்டு செல்லும் சாலையில் விதிகளை மீறி கட்டப்பட்ட தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சொந்தமான 4 மாடி கட்டிடத்தை இடிக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தாங்களே இடித்து அகற்றுவதாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் உறுதி அளித்தார். ஆனால் இதுவரை அந்த கட்டிடம் அகற்றப்படவில்லை.

இதையடுத்து நேற்று காலை நகராட்சி ஆணையர் முருகேசன் தலைமையில் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஊழியர் கள் 4 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக நவீன எந்திரங்கள் மூலம் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் அனுமதித்த அளவை விட கூடுதலாக கட்டிய 4 கட்டிடங்களின் உரிமையாளர்கள் தாங்களாகவே அதனை அகற்றி கொள்வதாக ஐகோர்ட்டில் தெரிவித்தனர். இதனை முறையாக கண்காணிக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அந்த 4 கட்டிடங்களும் முறையாக அகற்றப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக அந்த கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டது.இதற்கிடையே கொடைக்கானலில் ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டிடங்கள் குறித்த அறிக்கையினை இன்று (வியாழக்கிழமை) மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்