கரியபெருமாள்புதூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 279 காளைகள் 11 பேர் காயம்

எருமப்பட்டி அருகே உள்ள கரியபெருமாள்புதூர் கிராமத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 279 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி தள்ளியதில் மாடுபிடி வீரர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் என 11 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-01-30 23:15 GMT
எருமப்பட்டி,

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கரியபெருமாள்புதூர் கிராமத்தில் நடந்தது. இதையொட்டி ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் அனைவரும் சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கோவில் மாடுகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன.

பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து கயிறு அறுத்து விடப்பட்டன. அவை தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை தூக்கி வீசும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. அதனையும் மீறி காளைகளை அடக்கிய வீரர்களுக்கு மின்விசிறி, குடம், சில்வர் பாத்திரம், வேட்டி, சேலை, வெள்ளிக்காசு மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல் ஜல்லிக்கட்டில் அடக்க முடியாத மாடுகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளியே வரும் பெரும்பாலான மாடுகள் ஓட்டம் பிடித்து விட்டாலும், ஒருசில மாடுகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து, வீரர்களை பயமுறுத்துவதையும், அதை கண்டு மாடுபிடி வீரர்கள் தடுப்புகளில் ஏறுவதையும் பார்க்க முடிந்தது.

இதில் நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மொத்தம் 279 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200 மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் இருந்தனர். இவர்கள் 100 பேர் வீதம் சுழற்சி முறையில் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இவர்கள் மாடுகள் முட்டி படுகாயம் அடைந்த பார்வையாளர்கள் ராசிபுரம் பாலிக்காடு தமிழரசன் (வயது 19), சேந்தமங்கலம் லட்சுமணன் (18), அலங்காநத்தம் நவீன்குமார் (22) ஆகிய 3 பேருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இவர்களை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் மாடுகள் முட்டியதில் காயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் பொட்டிரெட்டிப்பட்டி ஆனந்தன் (35), ஆத்தூர் புங்கவாடி கிரீஸ்குமார் (31), தேவராயபுரம் பழனியாண்டி (24), வடுகப்பட்டி பூபதி (29), வேங்காகவுண்டம்பட்டி அன்பழகன் (35), உரம்பு ஜெயபிரதாப் (27) ஆகிய 6 பேரும், பார்வையாளர்களாக வந்த சேந்தமங்கலம் சதீஷ்குமார் (35), பொட்டிரெட்டிப்பட்டி ரவி (20) ஆகியோரும் அங்கேயே சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த ஜல்லிக்கட்டியில் மாடுகள் முட்டி தள்ளியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 11 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜல்லிக்கட்டை காண எருமப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் இன்றி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்தும், திருச்சி மாவட்டத்தில் இருந்தும் திரளான பொதுமக்கள் கரியபெருமாள்புதூரில் கூடி இருந்தனர். இவர்கள் அவ்வப்போது கைத்தட்டி ஆரவாரம் செய்து, மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தியவாறு இருந்தனர். அப்பகுதியில் உள்ள குன்றின் மேல் அமர்ந்தும், லாரிகளில் ஏறியும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இதேபோல் தீயணைப்பு வீரர்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

கடந்த 19-ந் தேதி பொட்டிரெட்டிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டின் போது மணிகண்டன் என்பவரது காளை அருகில் உள்ள கிணற்றில் விழுந்து பலியானதை தொடர்ந்து நேற்று சுமார் 400 அடி தூரத்திற்கு அப்பால் ரவுண்டானா போன்று தடுப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. காளைகளின் உரிமையாளர் அங்கு சென்று தனது காளையை பிடித்து வெளியே கொண்டு சென்ற பின்னர் தான் அடுத்த காளை விடப்பட்டது.

மேலும் செய்திகள்