பாபநாசம் அருகே தீயில் எரிந்து 3 கடைகள் நாசம் ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்

பாபநாசம் அருகே தீயில் எரிந்து 3 கடைகள் நாசமடைந்தன. இதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

Update: 2019-01-30 22:45 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி கிராமத்தில் பெரிய பள்ளி வாசல் எதிரே சந்துகேட் பஜாரில் ஓட்டல் நடத்தி வருபவர் முகமதுரபீக்(வயது48). இவருடைய கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் இந்த தீ அருகே உள்ள சாதிக்அலி என்பவரின் காய்கறிகடைக்கும், சிராஜுதீன் என்பவரின் ஓட்டலுக்கும் பரவியது.

உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். இது குறித்து வேதாரண்யம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் 3 கடைகளும் எரிந்து நாசமடைந்து விட்டன. இதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கடையில் எப்படி தீப்பிடித்தது என தெரியவில்லை? இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் 3 கடைகள் தீயில் எரிந்து நாசமடைந்த சம்பவம் ராஜகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்