ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் நேற்று ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-01-30 23:00 GMT

சிவகங்கை,

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணிகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜாக்டோ–ஜியோ பொறுப்பாளர்கள் தமிழரசன், இளங்கோவன், ஜோசப் சேவியர், தாமஸ் அமலநாதன் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 95 சதவீத ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று பணிக்கு திரும்பினர். இதையடுத்து நேற்று வழக்கம் போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகள் இயங்கியது. போராட்டத்தில் இருந்து பணிக்கு வந்த ஆசிரியர்கள் மீண்டும் உற்சாகமாக மாணவ–மாணவிகளுக்கு பாடங்களை எடுக்க தொடங்கினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக ஜாக்டோ–ஜியோ அமைப்பை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், ஜெய்சங்கர், டேவிட், சரவணன் முத்துக்குமார், இளங்கோவன், சிங்கராயர், ராமசுப்பு உள்பட 10 பேர் மீது சிவகங்கை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்