ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: கல்லூரி மாணவிகள்-நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவிகள்-நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-30 23:00 GMT
தஞ்சாவூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பள்ளிக்கு சென்றனர். அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகஅரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சங்கங்களான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தினர் தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினருடன் இணைந்து செயல்படாமல் தனியாக தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். இவர்களது போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்காமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழுவின்படி 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை எவ்வித நிபந்தனையும் இன்றி தமிழகஅரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்றனர். மற்ற அனைவரும் பள்ளிக்கு சென்றனர். ஊழியர்களும் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 480 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 1,630 ஊழியர்களும், 21 ஆசிரியர்களும் நேற்று பணிக்கு செல்லவில்லை.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் நீதித்துறை ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள் ராஜேஷ், எட்வர்டு, மாநில செயற்குழு உறுப்பினர் திலகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் போராட்டத்தினால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. அதேபோல தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்