குடிநீர் இணைப்பை துண்டிக்க சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீர் இணைப்பை துண்டிக்க சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-30 22:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெரிய எடப்பாளையம் பகுதியில் திரளான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு அங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த இடம் தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடம் என கூறினார். இது தொடர்பான வழக்கில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் இடம் தனிநபருக்கு சொந்தமானது என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை அறிந்த பெரிய எடப்பாளையம் பகுதி மக்கள் நாங்கள் காலம் காலமாக இங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் தான் குடிநீர் வினியோகம் பெற்று பயன்படுத்தி வருகிறோம்.

அவ்வாறு இருக்கும் போது இந்த இடத்தை நாங்கள் விட்டுத்தரமாட்டோம் என்று கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நேற்று கோர்ட்டு ஊழியர்கள் பெரிய எடப்பாளையம் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்தில் குடிநீர் இணைப்பை துண்டிக்க சென்றனர்.

அவர்களுடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முருகேசன், பொறியாளர் செல்வகுமார், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்