கடலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கடலூரில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2019-01-30 23:00 GMT
கடலூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்று 9-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. ஏற்கனவே முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமாக மாறியது.

அதேபோல் நேற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வநாதன், அம்பேத்கர், பெருஞ்சித்ரனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஜனார்த்தனன், நிதி காப்பாளர் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஊதிய உயர்வு கேட்கவில்லை. நிலுவைத்தொகையை தான் கேட்கிறோம் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்