கள்ளக்குறிச்சியில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்த செவிலியர்கள்

கள்ளக்குறிச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக, செவிலியர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.;

Update: 2019-01-30 22:00 GMT
கள்ளக்குறிச்சி,

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருவதை கைவிட கோரியும், தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அல்லது அரசு பதிவு பெற்ற சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி சுமுக தீர்வு காணவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சங்க மாநில தலைவர் சக்திவேல் தலைமையில், மாவட்ட தலைவர் கேசவன், மாவட்ட செயலாளர் சுசிலா, பொருளாளர் பிரேமலதா மற்றும் செவிலியர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

மேலும் அவர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொகுப்பூதிய காலத்தை பணிக்காலத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அட்டையையும் அணிந்திருந்தனர்.

இதேபோல் சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டத்தில் உள்ள 48 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சுமார் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்