தர்மபுரியில் 3 பள்ளிகளில் வருமானவரி சோதனை ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை
தர்மபுரி பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.;
தர்மபுரி,
தர்மபுரி நகரம் மற்றும் அதியமான்கோட்டை பகுதியில் ஒரே குழுமத்தை சேர்ந்த 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் 3 வாகனங்களில் திடீரென வந்தனர். அந்த பள்ளிகளின் அலுவலகங்களுக்கு சென்ற அவர்கள் அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு சோதனை நடத்தினார்கள்.
பிற்பகலில் தொடங்கிய சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு குழுக்களாக சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறையினர் இந்த பள்ளிகளின் வரவு-செலவு தொடர்பான பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். இந்தசோதனையின்போது வருமான வரி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
3 பள்ளிகளில் வருமான வரி செலுத்துவதில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்று உள்ளதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது வருமான வரி செலுத்துவதில் விதிமீறல் தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்ததா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தர்மபுரி பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித்துறையினர் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய இந்த திடீர் சோதனை பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.