பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 100 சதவீத பள்ளிகள் செயல்பட்டன - கல்வி அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 100 சதவீத பள்ளிகள் செயல்பட்டன என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2019-01-30 23:15 GMT
பொள்ளாச்சி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் செயல்படாமல் இருந்தன.ஒரு சில பள்ளிகள் தனியார் பள்ளி ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு பணிக்கு திரும்பா விட்டால், அந்த பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதை தொடர்ந்து ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

இதன் காரணமாக பள்ளிகள் வழக்கம் போல் நேற்று செயல்பட தொடங்கியது. ஒரு வாரத்திற்கு பிறகு மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 81 அரசு பள்ளிகள் உள்ளன. இங்கு பணிபுரிந்து வரும் 324 பேரில் 319 பேர் பணிக்கு வந்து விட்டனர். 5 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். வடக்கு வட்டாரத்தில் உள்ள 92 பள்ளிகளில் 272 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் 250 பேர் பணிக்கு வந்தனர். 8 பேர் விடுப்பில் உள்ளனர். ஜமீன் காளியாபுரம் பள்ளி ஆசிரியர் தங்கபாசு, களத்தூர் பள்ளி ஆசிரியர் சிவக்குமார் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 12 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள 73 பள்ளிகளில் 198 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் 194 பேர் பணிக்கு வந்து விட்டனர். 4 பேர் விடுப்பில் உள்ளனர். ஆனைமலை வட்டாரத்தில் உள்ள 85 பள்ளிகளில் 302 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 292 பணிக்கு வந்தனர். 10 பேர் விடுப்பில் உள்ளனர். இதேபோன்று வால்பாறை வட்டாரத்தில் உள்ள 85 பள்ளிகளில் 193 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 182 பேர் பணிக்கு வந்தனர். 7 பேர் விடுப்பிலும், 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 45 உள்ளன. இங்கு பணிபுரிந்து வரும் 937 ஆசிரியர்களில் 927 பேர் பணிக்கு வந்து விட்டனர். 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 100 சதவீதம் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படுகின்றன. இதனால் அரசு பள்ளிகளுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

நேற்று (நேற்று முன்தினம்) முதல் செல்போன் மூலம் மற்றும் குறுந்தகவல் அனுப்பியும் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்தனர். ஆனால் இன்று (நேற்று) வட்டார கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு நேரடியாக வந்து எழுதி கொடுத்து விட்டு, பள்ளிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள் வராத பள்ளிகள் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணியிடம் காலியிடமாக அறிவிக்கப்படும். இதற்கான உத்தரவு இன்னும் வரவில்லை. உயர் அதிகாரிகளிடம் இருந்து தகவல் வந்ததும், அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்