திருவண்ணாமலையில் நிர்வாண சாமியாரின் பூஜைக்கு தடை அதிகாரிகள் நடவடிக்கை
திருவண்ணாமலையில் நடந்து வந்த நிர்வாண சாமியாரின் பூஜைக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் எதிரே உள்ள ஒரு தனியார் இடத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொக்குல கொண்ட கைலாயஸ்ரமபீடாதிபதி சூரியபிரகாசனந்த சரஸ்வதி சாமி கடந்த 23-ந் தேதி முதல் நிர்வாணமாக யாக சாலை பூஜை நடத்தி வந்தார்.
இவர் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு யாக சாலை முன்பு நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்து வந்து உள்ளார். இதில் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் மற்றும் சூரிய, சந்திரலிங்கம் உள்பட 10 லிங்கங்களை முன்வைத்து இந்த பூஜையை செய்து உள்ளார். இந்த யாக சாலை பூஜை வருகிற 10-ந் தேதி வரை நடைபெற இருந்தது.
கடந்த ஆண்டு கிரிவலப்பாதையில் இந்த சாமியார் செய்த நிர்வாண யாக பூஜை அப்போது இருந்த மாவட்ட நீதிபதி மகிழேந்தி மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு நிர்வாண சாமியாரின் யாக சாலை பூஜை தனியார் இடத்தில் நடைபெற்று வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் மனோகரன், திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு நேற்று சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இங்கு யாக பூஜை செய்ய அனுமதி பெறவில்லை என்று இந்த நிர்வாண யாக சாலை பூஜைக்கு தடை விதித்தனர்.
இதையடுத்து அந்த இடத்தில் இருந்து சாமியார் உள்பட அவருடன் வந்தவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த சாமியார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று இனி நாங்கள் இங்கு யாக சாலை பூஜை நடத்த மாட்டோம் என்று எழுதி வாங்கினர்.
இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.