ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரான நிர்மலாதேவி பரபரப்பு பேட்டி ‘‘ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள்’’
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரான நிர்மலாதேவி பரபரப்பு பேட்டி அளித்தார். தனக்கு ஜாமீன் கிடைக்கவிடாமல் இடையூறு செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.
நிர்மலாதேவி தொடர்புடைய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மாதர் சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அந்த ஆவணங்கள் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு கொண்டு வரப்படாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் மதுரை சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 3 பேரும், நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போதும் வழக்கு விசாரணைக்கான ஆவணங்கள் வராததால், வழக்கு விசாரணையை வருகிற 14–ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி நிருபர்களிடம் கூறும் போது ‘‘ எனது ஒப்புதல் வாக்குமூலம் மிரட்டி பெறப்பட்டது. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கின்றனர். மற்ற விவரங்களை எனது வக்கீல் கூறுவார்’’ என்று கூறிச் சென்றார்.
இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி தரப்பு வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:–
கடந்த 10 மாதங்களாக நிர்மலாதேவி சிறையில் உள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு சிறையில் அவரை சந்தித்தேன். இந்த வழக்கு பாலியல் வழக்காக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். வழக்கில் பாலியல் மட்டும் அல்ல, மிகப் பெரிய அரசியல் பின்னணி உள்ளது.
சிறைக்கு வரவழைத்து உறவினர்கள், நண்பர்களை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு எழுதிக் கொடுத்தும், 10 மாதமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் சிறை விதி மீறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல நிர்மலாதேவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் மருத்துவர்கள்கூட முறையாக அவரை பரிசோதிப்பதில்லை. ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் மிகப் பெரிய அரசியல் சதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.