அந்தியூர் அருகே நடத்தையில் சந்தேகம் மண்வெட்டியால் வெட்டி 2–வது மனைவி படுகொலை; கணவர் கைது
அந்தியூர் அருகே மண்வெட்டியால் 2–வது மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொம்மநாயக்கர். இவருடைய மனைவி பாப்பம்மாள். இவர்களுடைய மகன் தர்மன் (வயது 48). விவசாயி. அவருடைய மனைவி கமலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலா குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் தர்மன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த மாடசாமி–ரங்கம்மாள் தம்பதியின் மகளான விஜயசாந்தி (வயது 24) என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார். விஜயசாந்தி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.
தர்மனும், விஜயசாந்தியும் ஆப்பக்கூடல் அருகே உள்ள பெரியகாளியூர் டேங்க் தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது விஜயசாந்திக்கு 11 மாதங்களே ஆன சுஜித் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் விஜயசாந்தி அடிக்கடி செல்போனில் அதிகநேரம் பேசி வந்துள்ளார்.
இதனால் கணவர் தர்மனுக்கு விஜயசாந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே விஜயசாந்தியை அவர் கண்டித்துள்ளார். அதனை கண்டுகொள்ளாத விஜயசாந்தி, செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மன் வீட்டுக்கு வந்தார். அப்போது விஜயசாந்தி செல்போனில் பேசியபடி இருந்து உள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தர்மன் வீட்டில் கிடந்த மண்வெட்டியை எடுத்து மனைவி விஜயசாந்தியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.
இதனால் ரத்தவெள்ளத்தில் விஜயசாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து தர்மன் தன்னுடைய குழந்தையை தூக்கிக்கொண்டு, காமநாயக்கன்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் குழந்தையை தர்மன் தாய் பாப்பம்மாளிடம் விட்டுவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார். ஆனால் வீட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற சம்பவம் குறித்து தாயாரிடம் கூறவில்லை.
இதற்கிடையில் நேற்று அதிகாலை ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தன்னுடைய 2–வது மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டேன் என்று கூறி சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் தர்மனின் வீடான பெரியகாளியூர் டேங்க் தோட்டம் பகுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், கொலை நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.
தர்மனின் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, அங்கு விஜயசாந்தி பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து போலீசார், கொலை செய்யப்பட்ட விஜயசாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை கொலை செய்த தர்மனை கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்த பயங்கர சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.