வானவில் : சமைக்கவும் பாத்திரம் கழுவவும் உதவும் டெட்ரா
சமையல் செய்வதை விட பாத்திரம் கழுவுவதுதான் இல்லத்தரசிகளுக்கு கடினமான வேலை. ஹீட் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் டெட்ரா என்ற கருவியை தயாரித்துள்ளது. இந்த கருவியில் சமைக்கவும், பாத்திரம் கழுவவும் முடியும்.
கிச்சன் மேடையில் இடத்தை அடைக்காமல் இருக்கக் கூடிய இந்த சிறிய சைஸ் கருவி தண்ணீரில் இருக்கும் எலெக்ட்ரோடுகளை கொண்டு உணவை ஆவியில் வேகவைக்கிறது. இதே நுட்பத்தை பயன்படுத்தியே பாத்திரங்களை கிருமிகளின்றி ஸ்டெரிலைஸ் செய்கிறது. கைகளால் கழுவுவதற்கு உபயோகிக்கும் தண்ணீரில் பத்தில் ஒரு மடங்கு நீரையே இந்த கருவி உபயோகிக்கிறது. பாத்திரம் கழுவ எந்த தண்ணீர் டேங்க்குடனும் இதனை இணைக்க தேவையில்லை. மின்சாரத்தில் இயங்கும் இந்த டெட்ரா பத்தே நிமிடத்தில் பாத்திரங்களை சுத்தம் செய்து விடும்.
காய்கறிகள், மாமிசம், அரிசி என அனைத்தையும் ஆவியில் வேக வைக்கவும் இது உதவுகிறது. எல்லா ஸ்மார்ட் கருவிகளை போன்று இதையும் செல்போனின் செயலியைக் கொண்டு கட்டுப்படுத்தலாம். விரைவாக செயல்படும் இந்த சாதனத்தால் நமது பொன்னான நேரமும் மிச்சமாகிறது.