சேலம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள மஞ்சள் குடோனில் பயங்கர தீ - ரூ.50 லட்சம் சேதம்
சேலம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குடோனில் ஏற்பட்ட பயங்கர தீயில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மஞ்சள் கருகி சேதமானது.;
கொண்டலாம்பட்டி,
சேலம் அருகே உத்தமசோழபுரம் சூளமேடு பகுதியில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த கூடத்தில் 10 குடோன்கள் உள்ளன. இங்குள்ள குடோன்களை வீரபாண்டி, பூலாவரி, வேம்படிதாளம், ஆட்டையாம்பட்டி, சித்தர்கோவில், நாழிக்கல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் வாடகைக்கு எடுத்து நிலக்கடலை, நெல், மஞ்சள், ஜவ்வரிசி உள்ளிட்டவைகளை இருப்பு வைத்துள்ளனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் லீ பஜாரில் மஞ்சள் மண்டி நடத்தி வருகிறார். இவர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள ஒரு குடோனில் 3,800 மஞ்சள் மூட்டைகளை இருப்பு வைத்துள்ளார். இந்த குடோனில் இருந்து நேற்று அதிகாலை கரும்புகை வெளியேறியது.
பின்னர் சிறிது நேரத்தில் அந்த குடோனில் பயங்கரமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த காவலாளிகள் இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி மாவட்ட அலுவலர் சிவகுமார் தலைமையில் நிலைய அலுவலர்கள் கோவிந்தன், சிராஜ் அல்வனீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குடோனில் முன்பகுதியில் இருந்த மஞ்சள் மூட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்த தீயில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகள் எரிந்து கருகி சேதமானது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேளாண்மை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.