நாடாளுமன்ற தேர்தலில் மக்களை காக்கும் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும்

நாடாளுமன்ற தேர்தலில் மக்களை காக்கும் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என்று ஆறகழூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Update: 2019-01-30 00:29 GMT
தலைவாசல், 

சேலம் புறநகர் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறகழூரில் தலைவாசல் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ரவி என்கிற மாதேஸ்வரன் வரவேற்றார்.

சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. காமராஜ், கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ. மருதமுத்து, ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி தெரியுமா என அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று தேசிய கட்சி முதல் மாநில கட்சி வரை கூட்டணி அமைக்க போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். ஆனால் தற்போது கூட்டணி பற்றி எதுவும் கூற முடியாது. தேர்தல் வரும் நேரத்தில் களத்திலே நிற்கும் போது இந்த தாய் நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மக்களை காக்கும் கூட்டணியாக அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் கூறியபடி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்களை காக்கும் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும்.

இன்று தமிழக முதல்-அமைச்சர் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்கள். கூலிப்படையினரை வைத்து வாக்குமூலம் கொடுக்கிறார்கள். அவர்கள் கூலிப்படையினர். கூலி கொடுத்தால் அவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் சொல்வார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நாங்கள் கேட்க விரும்புவது, உங்கள் நண்பர் ரமேஷ் கொலை செய்யப்பட்டார். அதை கூலிப்படை வைத்து சாட்சி சொல்ல வைத்தால் நீங்கள் சந்திக்க தயாரா? அதற்கு இன்றுவரை விடை தெரியவில்லை. இதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த நீங்கள் தயாரா?

சாதிக் பாட்சா மரணம் மர்மமாகவே உள்ளது. கூலிப் படையை வைத்து நாங்கள் ஒரு பட்டியலை வெளியிட தயார். இந்த கொலை குறித்து தார்மீக ரீதியில் எதிர்க்கட்சி தலைவர் சி.பி.ஐ. விசாரணை நடத்த தயாரா?

இன்றைய தினம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில், அவரின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் உழைத்து கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சோர்வடைய செய்வதற்காக எத்தனை ஆயுதங்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? அதை தடுக்க பாதுகாப்பு கவசமாக 7½ கோடி தமிழர்களும் இருப்போம் என்பதனை இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட துணைச்செயலாளர் அர்ஜூனன், மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா முருகேசன், ரமேஷ், நகர செயலாளர்கள் மோகன், மணிவண்ணன், தலைவாசல் ஒன்றிய நிர்வாகிகள் வேல்முருகன், ஜெயராமன், சக்கரவர்த்தி, ராஜேந்திரன், வையாபுரி, வீரமுத்து, செல்லம்மாள், கூட்டுறவு சங்க தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் இளங் கோவன் நன்றி கூறினார். இந்த கூட்ட முடிவில், ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அங்கு நடந்த தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்