சோழவரம் அருகே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் கைது செய்யக்கோரி கிராம மக்கள் மறியல்
சோழவரத்தை அடுத்த பூதூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே பூதூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே 2001-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை சுற்றி கம்பியால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையின் வலது கையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை நேற்று காலை அறிந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சோழவரம்-விச்சூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைராஜ், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி உள்பட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும், உடனடியாக சிலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற காவல்துறையும், வருவாய்த்துறையும் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். சிலையை சீரமைக்கும் பணி தொடங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். 6 மணி நேரம் போராட்டம் நீடித்த நிலையில் பிற்பகலில் சிலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.