கொடைக்கானல் நகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் உள்பட 43 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைப்பு
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் உள்பட 43 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் புதிய ‘மாஸ்டர் பிளான்’ என்ற திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வணிக வளாகங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வந்தன. இதனை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த வாரம் விதிகளை மீறி கட்டப்பட்ட 39 கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் விதிகளை மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்ட 43 கட்டிடங் களை பூட்டி ‘சீல்’ வைக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான அறிக்கையை நாளை (வியாழக்கிழமை)க்குள் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.
இதனையடுத்து நேற்று காலை நகராட்சி ஆணையர் முருகேசன் தலைமையில் நகரமைப்பு அலுவலர்கள் முருகானந்தம், பெரியசாமி, சரோஜா மற்றும் நகரமைப்பு ஆய்வாளர், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் 4 குழுக் களாக பிரிந்து கட்டிடங் களுக்கு ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நகரில் பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறிய கட்டப்பட்ட 43 கட்டிடங்களை பூட்டி சீல் வைத்தனர். அந்த கட்டிடங்கள் முன்பாக கோர்ட்டு உத்தரவை விளக்கி நோட்டீஸ் ஒட்டினர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்படி கொடைக்கானல் நகர் பகுதியில் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டுள்ள 43 கட்டிடங் கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதன் அறிக்கை நாளை, அல்லது நாளை மறுநாள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
கொடைக்கானல் நகரில் அதிகாரிகள் நடவடிக்கையில், தங்கும் விடுதி கட்டிடங்களுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் பணி இழந்துள்ளனர். மேலும் சீசன் தொடங்க உள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் அறைகள் கிடைக்காமல் அவதி அடையும் நிலையும் உள்ளது. எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களை வரைமுறைப்படுத்த வேண்டும். புதிய ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.