தோவாளையில் சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க. சார்பில் நூதன போராட்டம்

தோவாளையில் சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க. சார்பில் சங்கு ஊதி நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2019-01-29 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

தோவாளையில் பிரபலமான பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டத்தில் இருந்தும் நெல்லை, மதுரை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பூக்களை வாங்கி செல்ல வெளியூர் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலையிலேயே குவிவார்கள். இந்த மார்க்கெட் நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

மார்க்கெட்டின் முன் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பாலம் இருந்தது. குறுகலாக இருந்த இந்த பாலத்தால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து பாலத்தை விரிவு படுத்தும் பணி பல மாதங்களாக நடைபெற்றது. தற்போது பாலப்பணி நிறைவடைந்து 2 மாதங்கள் ஆகிறது.

ஆனால், பாலத்தின் இருபுறங்களையும் சாலையுடன் சரியாக இணைக்காமல் ஜல்லிகள் மட்டும் போடப்பட்டுள்ளது. மேலும், பாலத்தையொட்டிய சாலையும் குண்டும்- குழியுமாகவும், பாலத்தின் மேல் பகுதியில் தார் போடாமலும் உள்ளது. இதனால் புழுதி பறக்கிறது. இதனால், வாகனங்கள் செல்லும்போது, தூசி கிளம்புவதால் அப்பகுதியில் உள்ள பூ வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இந்தநிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று காலையில் நூதன போராட்டம் நடைபெற்றது. அதாவது தி.மு.க. வினர் சங்கு ஊதி நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆட்டோ டிரைவர்கள் முக கவசம் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் சாலையை சீரமைக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்துக்கு தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கருணாநிதி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மாணிக்கம், ராஜபாபு மற்றும் ஆட்டோ சங்க தலைவர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்