பொள்ளாச்சி அருகே சம்பவம் தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவி சாவு

பொள்ளாச்சி அருகே பள்ளி செயல்படாததால், வீட்டுக்கு வந்து விளையாடியபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-01-29 22:30 GMT
பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). இவரது மனைவி மகேஸ்வரி (33). கணவன், மனைவி இருவரும் கட்டிட தொழிலாளர்கள்.

இவர்களது மகள் அமுதா (7). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணேசன் திண்டுக்கல்லுக்கு சென்று விட்டார். இதையடுத்து மகேஸ்வரி தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

மகேஸ்வரி தினமும் வேலைக்கு செல்லும் முன், அமுதாவை பள்ளியில் விட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காலையில் பள்ளியில் விட்டு விட்டு, பொள்ளாச்சிக்கு கட்டிட வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் மாலையில் மகேஸ்வரி வீட்டுக்கு வந்தார். அப்போது மகள் அமுதா வீட்டில் இல்லை. அவர் அக்கம், பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் பக்கத்து வீட்டுக்காரர் அந்த பகுதியில் தரைமட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே சென்றார். அங்கு சிறுமி அமுதா பிணமாக கிடந்தார். இது பற்றி அவர் மகேஸ்வரிக்கு தகவல் கொடுத்தார். மகேஸ்வரி அங்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அமுதாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், பள்ளி விடுமுறை விட்டதும் மாணவி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் 10 அடி ஆழம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் மீன்குஞ்சுகளை பார்க்க சென்றார். அப்போது மாணவி அமுதா எதிர்பாராதவிதமாக தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்