நாகர்கோவிலில் பரிதாபம் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2019-01-29 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணம் வில்ஸ் நகரை சேர்ந்தவர் டைட்டஸ். கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்டத்தில் காவலாளி. இவருடைய மகன் ஜினோ (வயது 19). இவர் பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடன் அதே கல்லூரியில் படிக்கும் மேலபுத்தேரி பகுதியை சேர்ந்த விஷ்ணுவும் (18) சென்றார். ஜினோ மோட்டார் சைக்கிளை ஓட்டினார். விஷ்ணு பின்னால் அமர்ந்து இருந்தார்.

இவர்கள் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் சென்ற போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை ஜினோ முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் பஸ் மீது உரசியதாக தெரிகிறது.

இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இருவரும் ரோட்டில் விழுந்தனர். அப்போது பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி ஜினோ படுகாயம் அடைந்தார். அவருடைய நண்பர் விஷ்ணுவும் காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 2 பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜினோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜினோ பரிதாபமாக இறந்தார். விஷ்ணுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பஸ் சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவன் பலியான சம்பவம் சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்