இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு வரவில்லை, பட்டதாரி ஆசிரியர்கள் 96 சதவீதம் பேர் வேலைக்கு வந்தனர்
கோவை மாவட்டத்தில் நேற்று 96 சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பினார்கள். ஆனால் 86 சதவீத இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மேலும் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
கோவை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம் முறையை கைவிட வேண்டும், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நேற்று 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதற்காக காலை 10 மணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு கூடினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கூடினார்கள். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் செந்தூரான் தலைமை தாங்கினார். விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆசிரியர் கைது
அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சிவக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினார்கள். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்கு வந்தனர்
கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த வேலைநிறுத்தத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 872 பேரில் நேற்று முன்தினம் நடந்த வேலைநிறுத்தத்தில் ஆயிரத்து 918 பேர் கலந்து கொண்டனர். இது 36 சதவீதம் ஆகும். ஆனால் நேற்று நடந்த வேலைநிறுத்தத்தில் 320 பேர் தான் கலந்து கொண்டனர். இது 4 சதவீதம். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 96 சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று வேலைக்கு வந்தனர். கோவை மாநகராட்சி பள்ளிகளில் 867 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் நேற்று முன்தினம் நடந்த வேலைநிறுத்தத்தில் 206 பேர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று குறைந்து 72 பேர் மட்டுமே வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டனர். அவர்களிலும் சிலர் பயந்து கொண்டு நேற்று மாலை பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளி மூடப்பட்டதால் அவர்கள் இன்று வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால் கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த வேலைநிறுத்தத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 3 ஆயிரத்து 232 பேர் கலந்து கொண்டனர். இது 89 சதவீதம் ஆகும். நேற்று நடந்த வேலைநிறுத்தத்தில் மொத்தம் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 4 ஆயிரத்து 292 பேரில் 3 ஆயிரத்து 92 பேர் கலந்து கொண்டனர். இது 86 சதவீதம் ஆகும். எனவே வேலைநிறுத்தத்தில் பட்டதாரி ஆசிரியர்களை விட இடைநிலை ஆசிரியர்கள் தான் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டதால் தொடக்கப்பள்ளிகளில் நேற்று வகுப்புகள் பாதிக்கப்பட்டன. ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று அதிக எண்ணிக்கையில் வேலைக்கு சென்றதால் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்புகள் வழக்கம் போல நடந்தன.
கோவையில் நேற்று முன்தினம் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 42 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 341(வழிமறித்து இடையூறு செய்தல்), 353(அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) மற்றும் குற்ற சட்டம் 7 (1) ஏ ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 7(1) ஏ பிரிவு ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவாகும்.
கோவை கோர்ட்டு முன்பு மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்டத் தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 பெண் ஊழியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண் டனர்.