கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஷயான், மனோஜ் ஜாமீன் ரத்து இல்லை 2-ந் தேதி ஆஜராக உத்தரவு
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் ஷயான், மனோஜ் ஜாமீன் ரத்து ஆகவில்லை. அவர்கள் 2-ந் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூருக்கு படுகாயம் ஏற்பட்டது. எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் சிலருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களில் சேலத்தில் நடந்த ஒரு விபத்தில் டிரைவர் கனகராஜ் இறந்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி (அடுத்த மாதம்) ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஷயான், மனோஜ் ஆகிய 3 பேரும் கோடநாடு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்தி பேட்டி அளித்தனர்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஷயான், மனோஜ் ஆகிய இருவரை கைது செய்து சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து கடந்த 18-ந் தேதி அரசு தரப்பில் வக்கீல் பாலநந்தகுமார் என்பவர் ஷயான், மனோஜ் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டு உள்ள ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீலகிரி மாவட்ட கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி வடமலை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி, கடந்த 24-ந் தேதி ஷயான், மனோஜ் ஆகியோர் தரப்பில் சென்னையை சேர்ந்த வக்கீல் அகிலேஷ், ஊட்டியை சேர்ந்த வக்கீல்கள் ஆனந்த், செந்தில் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் முதல்-அமைச்சர் தரப்பில் ஷயான், மனோஜ் மீது போடப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருவதால் இருவரும் கோர்ட்டில் ஆஜராவதற்கும், வழக்கு சம்மந்தமாக பதில் மனுத்தாக்கல் செய்வதற்கும் 10 நாட்கள் காலஅவகாசம் கோரி நீலகிரி மாவட்ட கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி வடமலை இதுதொடர்பாக ஷயான், மனோஜ் ஆகிய இருவரும் 29-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராகவும், பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஷயான், மனோஜ் ஆகிய இருவர் நீலகிரி மாவட்ட கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்கள் தரப்பில் வக்கீல்கள் ஆனந்த், செந்தில் ஆகியோர் ஆஜராகி ஷயான், மனோஜ் ஆகியோர் ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என மனுத்தாக்கல் செய்தனர். அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் பாலநந்தகுமார், வக்கீல் தேவராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.
இருதரப்பினர் வாதத்தை கேட்ட நீதிபதி வடமலை வருகிற 2-ந் தேதி (அடுத்த மாதம்) கோடநாடு வழக்கு விசாரணைக்கு வருவதால், அன்றைய தினம் ஷயான், மனோஜ் ஆகிய இருவரும் ஆஜராக வேண்டும். அன்று விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார். எனவே அவர்கள் ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டில் இருந்து ஷயான், மனோஜ் ஆகியோர் வெளியே வந்தனர்.
அப்போது வெளியில் நின்ற தொலைக்காட்சி நிருபர்கள், பத்திரிகையாளர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். அவர்களை வக்கீல் ஆனந்த் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க அலுவலகத்திற்குள் அழைத்து சென்றார். இதற்கு அரசு வக்கீல்கள் பாலநந்தகுமார், தேவராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை வக்கீல் சங்க அலுவலகத்துக்குள் அழைத்து செல்லக்கூடாது என்று கூறினார்கள்.
அப்போது வக்கீல் ஆனந்துக்கு ஆதரவாக சில வக்கீல்கள் பேசினர். பின்னர் உடனே ஷயான், மனோஜ் இருவர் வெளியே அழைத்து வரப்பட்டு, காரில் ஏறினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அரசு வக்கீல் பாலநந்தகுமார் கூறிய தாவது:-
ஷயான், மனோஜ் ஆகியோர் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் டெல்லியில் பேட்டி அளித்ததால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தேன்.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் ஷயான், மனோஜ் தங்களது ஜாமீனை தள்ளுபடி செய்யக்கூடாது எனவும், கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கவும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவர்கள் இருவரும் திரும்ப பெற்றனர்.
அதனை தொடர்ந்து இன்று (நேற்று) ஊட்டி கோர்ட்டில் ஷயான், மனோஜ் இருவரும் ஆஜரானார்கள். அப்போது ஜாமீன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட நீதிபதியிடம் தெரிவித்தேன். மாவட்ட நீதிபதி வருகிற 2-ந் தேதி வழக்கு விசாரணைக்கு 2 பேரையும் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.