குன்னூர் அருகே பள்ளி திறக்கப்படாததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றம்

குன்னூர் அருகே பள்ளி திறக்கப்படாததால், மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Update: 2019-01-29 22:45 GMT
குன்னூர், 

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து சாலைமறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் பல பள்ளிகள் மூடப்பட்டது. இதற்கிடையில் தமிழக அரசு போராட்டத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குன்னூர் அருகே உள்ள காந்திபுரத்தில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கேட்டின் சாவியை அருகில் உள்ள வீட்டில் கொடுத்து வைப்பது வழக்கம். வகுப்பறைகளின் சாவி மட்டும் ஆசிரியர்களின் கையில் வைத்திருப்பார்கள்.

நேற்று முன்தினம் ஆசிரியர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்பதால் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று அரசு அறிவிப்பு படி தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு வருவார்கள் என்று கருதி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் அருகில் உள்ள வீட்டில் உள்ள பிரதான கேட்டின் சாவியை வாங்கி திறந்து பள்ளிக்குள் மாணவ-மாணவிகள் சென்றனர். அவர்கள் வகுப்பறை முன்பு அமர்ந்து இருந்தனர். சிலர் பள்ளி வளாகத்தில் விளையாட தொடங்கினார்.

நீண்ட நேரம் ஆனபோதும் பள்ளிக்கு ஆசிரியர்கள் யாரும் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள் அங்கிருந்து திரும்பி வீட்டிற்கு சென்றனர்.

மேலும் செய்திகள்