தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்: 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நாராயணசாமி நம்பிக்கை

புதுவையில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். புதிதாக தொழில்கள் தொடங்கப்படுவதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-01-29 23:45 GMT

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2016–ம் ஆண்டு புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தொழில் தொடங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புதிய தொழில் முதலீட்டாளர்களை புதுவையில் தொழில் தொடங்க அனுப்புமாறு நிதி ஆயோக்கிடமும் முதல்–அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் தொழில் முதலீட்டாளர்களுடனான ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு அசோகா ஓட்டலில் கடந்த 2 நாட்களாக நடந்தது. கூட்டத்தில் கம்ப்யூட்டர், செல்போன் தயாரிப்பு உள்ளிட்ட 45 நிறுவனங்கள் கலந்துகொண்டன.

கூட்டத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். புதுவையில் தொழில் தொடங்க அரசு அளித்துள்ள சலுகைகள் குறித்து தொழில்துறை அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. மற்றும் அரசு செயலாளர்கள் விளக்கினர்.

கூட்டம் முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களை அனுப்பி வைக்குமாறு ஏற்கனவே நிதி ஆயோக்கிடம் கேட்டிருந்தேன். அதன்படி இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கம்ப்யூட்டர், செல்போன் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நேற்று 2–வது நாளாக நடந்த கூட்டத்தில் 22 தனியார் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இங்கு தொழிற்சாலைகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளதா? என்று முதலீட்டாளர்கள் கேட்டனர். அவர்களுக்கு புதுவையில் தொழில் தொடங்க தேவையான மனிதவளம், உற்பத்தி பொருட்கள், ஏற்றுமதிக்கான போக்குவரத்து மற்றும் துறைமுக வசதி, குறைந்த விலையில் தடையில்லா மின்சாரம், உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட தொழில்பேட்டைகள், புதிய தொழில்கொள்கையின் மூலம் பல்வேறு சலுகைகள், மானியங்கள், தொழில் தொடங்க உரிமம் வழங்குவதற்கு விரைவான ஏற்பாடுகள் போன்றவை குறித்து விளக்கினோம்.

காற்று மற்றும் நீர் மாசு இல்லாத நிலத்தடி நீரை பயன்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு மட்டும் புதுச்சேரியில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்பதும் வலியுறுத்தி கூறப்பட்டது. தனியார் தொழில் தொடங்க பிப்டிக் மூலம் தேவையான வசதிகள் கொண்ட இடம் தேர்ந்தெடுத்து வழங்கப்படும். இது தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் கூடியதாகவும் இருக்கலாம்.

புதுவையில் உள்ள துறைமுகம் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இயங்கும். தற்போது பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு விமான போக்குவரத்து உள்ளது. சென்னை, சேலம் போன்ற இடங்களுக்கு இது விரிவு படுத்தப்படும். நான் சென்ற மாதம் துபாய் சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசியதன் மூலம் அவர்கள் புதுவையில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து வருகின்றனர். தொழில் முனைவோர்கள் எளிதில் என்னையும், அமைச்சர்களையும் சந்திக்கலாம்.

புதுவையில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் தயாராக உள்ளனர். 5 வருடத்தில் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜியோனி, எம்.ஐ., எஸ்.எல்.என். டெக்னாலஜி, மானோடெக், லெனோவா, ஏசர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டன.

புதுவையினை எலக்ட்ரானிக் கேந்திரமாக உருவாக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள். தொழில் தொடங்க முன்வருவோரிடம் புதுவையை சேர்ந்தவர்களுக்கு 60 சதவீத வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இந்த நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது அதிக அளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு சேதராப்பட்டு, கரசூர், மேட்டுப்பாளையம், கரசூர் போன்ற பகுதியில் ஏராளமான இடங்கள் உள்ளன. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக பல்நோக்கு தொழில் பூங்கா உருவாக்க ஏற்பாடு செய்யப்படும். புதுவையில் பல ஆண்டுகளுக்குப்பின் முதலீட்டாளர்களை அழைத்துப்பேசி உள்ளோம். அவர்களும் ஆர்வமாக உள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் புதுவையில் தான் குறைந்த விலையில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.

புதுவையின் கட்டமைப்பு அவர்களுக்கு பிடித்துள்ளது. புதிய வரிச்சலுகைகளையும் அவர்கள் கேட்டுள்ளனர். அதுதொடர்பாக பேசி முடிவு எடுப்போம். முன்புபோல புதுவையில் தற்போது தொழிலாளர் பிரச்சினைகளும் இல்லை. மாமூல் வசூலிப்பதும் ஒழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்