இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் - 20 பேர் கைது
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுலகம் அருகே திருவண்ணாமலை - போளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பரசன், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் நந்தன் கலந்துகொண்டார்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிறு, குறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் அப்துல்காதர், செல்வம், உதயகுமார், பரமசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.