போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறதா? தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு இன்று நேரில் ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டத்துக்கு தற்போது அனுமதி வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-01-29 22:45 GMT

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த மோகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மக்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் கடந்த 3 மாதங்களாக பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் போலீசார் அனுமதி வழங்குவது கிடையாது. போராட்டத்துக்கு அனுமதி கேட்பவர்கள் தேவையின்றி அலைக்கழிப்பு செய்யப்படுகிறார்கள். அதுமட்டும் அல்லாமல் அவர்களை போலீசார் தொந்தரவு செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சாட்சி அளிப்பவர்கள் மீதும் பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அருணாஜெகதீசன் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ்ராஜ் என்பவர் மீது போலீசார் பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

எனவே தூத்துக்குடியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 24 மணி நேரமும் வக்கீல்கள் குழு பணியில் இருக்க சட்ட உதவி மையத்தின் உறுப்பினர் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். 15.8.2018 முதல் 15.1.2019 வரை தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டவர்களுக்காக மூத்த வக்கீல் அடங்கிய குழுவினை தாலுகா அளவில் அமைக்க மாவட்ட சட்ட உதவி மையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், கடந்த 3 மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எத்தனை பேர் அனுமதி கேட்டுள்ளனர், எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை (அதாவது இன்று) நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்