நீர் நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு குடிநீர், மின்இணைப்பு வழங்கக் கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரி வசூலிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-29 22:15 GMT

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தமிழகத்தில் குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது, மின் இணைப்பு வழங்கக்கூடாது, உள்ளாட்சி அனுமதியுடன் வரைபட அனுமதி அளிக்கக்கூடாது, சொத்து வரி வசூலிக்கக்கூடாது, ஆக்கிரமிப்பு கட்டிட உரிமையாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கக்கூடாது, அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கடந்த 2017–ம் ஆண்டு மத்திய ஆடிட்டர் ஜெனரல் அளித்த வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் பிப்ரவரி மாதம் 11–ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்நிலைகளின் மூல வரைபடங்களின் நகல்களை சார்–பதிவாளர் அலுவலகங்களுக்கும், மின்வாரியத்துக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் பிப்ரவரி மாதம் 8–ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

நீர்நிலைகளில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எந்த பத்திரமும் பதிவு செய்யக்கூடாது என்று அனைத்து சார்–பதிவாளர்களுக்கும் தமிழக பதிவுத்துறை தலைவர் சார்பில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில்லை என்பதை மின்வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கக்கூடாது என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்கக்கூடாது.

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட உத்தரவு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வருகிற 13–ந்தேதி அறிக்கையாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்