இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Update: 2019-01-29 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன் தினம் 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஒரு சில படகுகளில் இறங்கி மீனவர்களை தாக்கியதாகவும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து ராமேசுவரம் ஜேம்ஸ் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதில் இருந்த மீனவர்கள் முருகேசன்(வயது 47), நவீன்(35), ஆனந்த்(42), செந்தில்பாண்டி(37) ஆகிய 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இது மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறியதாவது:– தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் மீனவர்கள் மீது அரசு கவனம் செலுத்தவில்லை.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 18 படகுகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்தாலும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் தொல்லையில்லாமல் மீன்பிடிக்க வழிவகை செய்ய மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். துப்பாக்கியால் சுட்டு மிரட்டும் நிலை உள்ளதால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் தினமும் அச்சத்துடன் செல்ல வேண்டியது உள்ளது. இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள படகுகளை எடுத்து வரவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய–மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் 4 பேரையும் விடுவித்தார். மேலும் அந்த படகின் உரிமையாளர் உரிய ஆவணங்களுடன் மார்ச் 5–ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்