ஜாக்டோ–ஜியோ போராட்டம் எதிரொலி தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த ஏற்பாடு
ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஆரம்பப்பள்ளிகளில் கல்வி பணி பாதிக்கப்படுவதை தவிர்க்க தனியார் பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள 18 ஆசிரியர்களுக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.;
ராமநாதபுரம்,
தமிழகத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 7–ம் நாளான நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டு கைதானவர்களில் 45 பேர் மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு இருதயநோய் பாதிப்பு இருந்ததால் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 44 பேர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து 8–ம் நாளான நேற்று மறியல் போராட்டம் நடைபெறாத நிலையில் அந்தந்த தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அலுவலர்கள் முழுமையாக வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் அந்த அலுவலகங்கள் மட்டும் பூட்டப்பட்டிருந்தன. மற்ற அலுவலகங்களில் நேற்று கூடுதலாக பணியாளர்கள் வந்து பணிகளை மேற்கொண்டனர். மாவட்டத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 3,932 பேர் மட்டும் பணிக்கு வராமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 6,325 பேர் பணிக்கு வராமல் புறக்கணிப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் பார்க்கும்போது நேற்று 2,000–த்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்கும் வகையில் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சற்று கூடுதலாக பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ–மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறியதாவது:–
மாவட்டத்தில் நேற்று மேல்நிலைப்பள்ளிகள் 95 சதவீதம் இயங்கின. மொத்தம் உள்ள 3,505 ஆசிரியர்களில் 3,191 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். 82 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். 232 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. தொடக்கப்பள்ளிகளை பொறுத்தவரையில் 2,650 பேர் பணிக்கு வரவில்லை. தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வராத இடங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் குறைந்த 2 ஆசிரியர்கள் வீதம் 600 பேர் அரசு ஆரம்பப்பள்ளிகளில் பாடம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்கப்பட்டுள்ளது. பல ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கையெழுத்திடாமல் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின்படி தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க 3,891 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி அடிப்படையில் 1, 254 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவார்கள். ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள 19 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கைதாகி உள்ள 45 ஆசிரியர்கள் காவல்துறை அறிக்கை கிடைக்கப்பெற்றதும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் முதலில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 18 ஆசிரியர்கள் சார்பில் ஜாமீன் வழங்கக்கோரி ராமநாதபுரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதுதவிர, நேற்று கைதாகி சிறையில் உள்ள 44 ஆசிரியர்களுக்கும் ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.