இந்து ஆன்மிக கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்வு 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி

சென்னையில் 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியுடன், இந்து ஆன்மிக கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்வுகள் நிறைவு அடைந்தது.

Update: 2019-01-29 23:00 GMT
சென்னை,

சென்னை வேளச்சேரியில் 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சிக்கு பொதுமக்களை லட்சக்கணக்கில் ஈர்க்கும் வகையில் பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விவேகானந்தர் ரத யாத்திரை, மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, யோகாசன பயிற்சி, பாடல் நிகழ்ச்சி, பரதநாட்டிய நிகழ்ச்சி, விவேகானந்தர் போன்று உடையணிந்து நடைபயணம், விநாயகர் அகவல் மற்றும் விஷ்ணு சகஸரநாம பாராயணம் பாடும் நிகழ்வு, பக்தி பாடல் என 8 கட்டங்களாக முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

சைக்கிள் பேரணி

இந்தநிலையில் இந்து ஆன்மிக கண்காட்சியின் 9-வது முன்னோட்ட நிகழ்வான ‘திரங்கா சைக்கிள்தான்’ எனும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி முன்பு இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது.

இந்த சைக்கிள் பேரணியை குரூப் கேப்டன் எஸ். சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். டி.ஏ.வி. கல்விக் குழுமங்களின் தாளாளர்-செயலாளர் ராஜேந்திரன், குருநானக் கல்லூரி முதல்வர் மா.செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். துரைப்பாக்கம் சந்திப்பு வரை பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பதாகைகள்

பேரணியின்போது வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை வளர்த்தல் போன்ற இந்து ஆன்மிக கண்காட்சியின் முக்கிய நோக்கங்கள் குறித்து வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளையும் மாணவர்கள் ஏந்தி சென்றனர்.

‘போற்றுதும் மரங்களை வனங்களின் வடிவமாம்’, ‘போற்றுதும் அரவங்களை வன உயிர்களின் வடிவமாம்’, ‘போற்றதும் ஆவினம் அனைத்துயிர் வடிவமாம்’, ‘போற்றதும் கங்கையை இயற்கையின் வடிவமாம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மிதி வண்டிகளில் கட்டப்பட்டிருந்தன. பேரணியாக சென்ற மாணவர்களை அங்கிருந்த பொதுமக்களும் ஊக்கப்படுத்தினர்.

மேலும் செய்திகள்