போராட்ட களத்துக்கு வரும் முன்பே ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் 450 பேர் கைது போலீசார் விரட்டிப்பிடித்தனர்

ஈரோடு மாவட்டத்தில் போராட்ட களத்துக்கு வருவதற்கு முன்பாக ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் 450 பேரை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.

Update: 2019-01-29 23:00 GMT

ஈரோடு,

தமிழகம் முழுவதும் கடந்த 22–ந் தேதி முதல் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் கீழ் உள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் வழக்கம்போல வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ–ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர். அதன்படி ஈரோடு காளைமாடு சிலை மற்றும் கோபி பஸ் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என்று ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர். காலையில் மறியல் போராட்டம் என்பது ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றும் ஏராளமான ஆசிரிய–ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் ஈரோடு காளை மாடு சிலை பகுதிக்கு வந்தனர். ஆனால், அவர்கள் போராட்டம் நடைபெறும் நீல்கிரீஸ் பகுதிக்கு செல்ல முடியாதபடி சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், மாவட்ட குற்ற ஆவணபாதுகாப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா, போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு எட்டியப்பன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், முருகையன், அமுதா, வினோதினி மற்றும் போலீசார் கடுமையான பாதுகாப்பு பணியில் இருந்தனர். காந்திஜி ரோட்டில் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் பகுதி, காளைமாடு சிலை, கள்ளுக்கடை மேடு, ரெயில் நிலையம் முன்பகுதி ஆகிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அந்த வழியாக ஆசிரியைகள் செல்வதை பார்த்தால் உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரித்து கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதனால் எந்த பகுதியில் இருந்தும் யாரும் போராட்ட களமான நீல்கிரீஸ் பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்ட ஆசிரியைகள், பெண் அரசு ஊழியர்கள் அனைவரும் சூரம்பட்டி வலசு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கும், ஆண்கள் அனைவரும் ஜனனி திருமண மண்படத்துக்கும் கொண்டு செல்லப்பட்டனர். பகல் 1 மணிவரை இந்த கைது நடவடிக்கை தொடர்ந்தது. போலீசார் போராட்டத்துக்கு அனுமதி அளிக்காததால் என்ன செய்வது என்று ஆங்காங்கே கூடி நின்றுகொண்டிருந்தவர்களையும் போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். இதுபோல் டீக்குடிக்க கடைகளில் நின்று கொண்டிருந்தவர்களையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். தனியாக சென்ற ஆசிரியைகள், அரசு ஊழியர்களையும் விரட்டிப்பிடித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

10–க்கும் மேற்பட்டவர்களை இன்னொரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். நேற்று ஈரோட்டில் மட்டும் 211 பெண்களும், 27 ஆண்களும் என 238 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். இதுபோல் கோபியில் 16 ஆண்கள் உள்பட 120 பேரும், சத்தியமங்கலத்தில் 45 ஆண்கள் உள்பட 92 பேரும் என மாவட்டம் முழுவதும் நேற்று 450 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போராட்டத்துக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போலீசாரின் நடவடிக்கையால் போராட்ட களத்துக்கு வராமல் திரும்பி சென்றனர். இதனால் நேற்று முன்தினத்தை விட மிகக்குறைவான அளவிலேயே கைது எண்ணிக்கை இருந்தது.

ஈரோட்டில் நேற்று அனைத்து பள்ளிக்கூடங்களும் திறந்து இருந்தன. மாற்றுப்பணி ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரிய–ஆசிரியைகள் வகுப்புகளை கவனித்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி ஏ.முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது:–

ஈரோடு கல்வி மாவட்டத்தில் நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் முழுமையாக செயல்படுகின்றன. நிதி உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து ஆசிரிய–ஆசிரியைகளும் வந்துவிட்டனர். அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 99 சதவீதம் ஆசிரிய–ஆசிரியைகள் பணிக்கு வந்து விட்டார்கள். 1046 பேருக்கு 1036 பேர் பணியில் உள்ளனர். தொடக்கப்பள்ளிக்கூடங்கள், நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் உள்ள 1003 ஆசிரிய–ஆசிரியைகளில் 855 பேர் பணிக்கு வரவில்லை. மீதமுள்ளவர்கள் மட்டும் பணியில் இருக்கிறார்கள். போராட்டத்தில் பங்கு பெற்று பணிக்கு வந்தவர்களிடம் இனிமேல் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று கடிதம் எழுதி பெற்றுக்கொண்டு பணியில் அனுமதித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு மாவட்ட அளவில் நேற்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூட ஆசிரிய–ஆசிரியைகள் 99 சதவீதம் அளவுக்கு பணியில் சேர்ந்து விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறினார். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் பணியில் சேர மாலைவரை ஏராளமானவர்கள் அதிகாரிகளை அணுகி உள்ளனர். எனவே நாளை (இன்று) முதல் பள்ளிக்கூடங்கள் முழுமையாக இயங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்