ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் முதியவருக்கு இருதய ‘வால்வு’ மாற்றம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் முதியவருக்கு இருதய ‘வால்வு’ மாற்றப்பட்டது.

Update: 2019-01-29 21:45 GMT
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 70). பால் வியாபாரியான இவர் கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ராதாகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ‘வால்வு’ சுருங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் ராதாகிருஷ்ணன் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு நவீன சிகிச்சையான பலூன் குழாய் மூலம் இருதய ‘வால்வு’ மாற்றும் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 3-ந்தேதி டாக்டர் மகாதேவன் கண்காணிப்பில், டாக்டர் ஞானவேலு தலைமையிலான 6 டாக்டர்கள் கொண்ட குழுவினர் இந்த நவீன சிகிச்சையை செய்தனர். இந்த சிகிச்சை குறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ராதாகிருஷ்ணனுக்கு முதல் முறையாக பலூன் குழாய் மூலம் இருதய ‘வால்வு’ மாற்றும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு ரூ.60 லட்சம் வரை செலவாகும். இந்தியாவில் இந்த நவீன பலூன் சிகிச்சை இதுவரை 250 பேருக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நவீன சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்