கொடுங்கையூரில் வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கொடுங்கையூரில் வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-01-29 21:30 GMT
பெரம்பூர்,

கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 30). கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் செந்தில்குமார் சவாரி செல்வதற்காக கொடுங்கையூர் காவேரி சாலையில் நிறுத்தி வைத்திருந்த தனது காரை எடுப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, காவேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரை வழிமறித்து தலையிலும், கையிலும் கத்தியால் வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

பின்னர், காயமடைந்த செந்தில்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிகரபுத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்