சின்னசேலம் அருகே, விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை-பணம் கொள்ளை

சின்னசேலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-01-29 23:00 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70), விவசாயி. இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு பச்சைமுத்து, ஆதி என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை ராமசாமி தனது மனைவி பச்சையம்மாளுடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

வீட்டில் பச்சைமுத்து மனைவி விஜயலட்சுமியும், ஆதி மனைவி சத்யாவும் இருந்தனர். இந்த நிலையில் காலை 10 மணி அளவில் விஜயலட்சுமி, விலையில்லா ஆடுகள் வாங்குவதற்காக பக்கத்து கிராமத்துக்கு சென்று விட்டார். சத்யாவும் தனது குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தில் சத்யாவும், விஜயலட்சுமியும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த 2 பேரும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை காணவில்லை.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து, பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்