திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

Update: 2019-01-29 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கடந்த 22–ந் தேதி தொடங்கியது. 1–4–2003–க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டவர்களில் முக்கிய நிர்வாகிகள் 45 பேரை போலீசார் கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி சங்க மாநில துணை தலைவர் கனகராஜா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க நிர்வாகி சவுந்தர்ராஜன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் ரோட்டோரம் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். போலீஸ் துணை கமி‌ஷனர் உமா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். முன்னதாக ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து கொண்டு செல்வதற்காக 7 பஸ்கள் தயார் நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் ஆர்ப்பாட்டத்துடன் போராட்டத்தை முடித்துக்கொண்டதால் பஸ்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் நேற்று பணிக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்