கடலோர காவல்படையில் டிப்ளமோ என்ஜினீயா்கள் சேர்ப்பு

கடலோர காவல் படையில் பயிற்சி யுடன் கூடிய ‘யந்த்ரிக்’ பணிக்கு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

Update: 2019-01-29 12:14 GMT
இந்திய கடலோர காவல் படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த படைப்பிரிவில் தற்போது ‘யந்திரிக்/2-2019 பேட்ஜ்’ பயிற்சியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். 3 வருட டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே...

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சம் 22 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது 1-8-1997 மற்றும் 31-7-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் (ரேடியோ/பவர்) பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ படிப்பை முழு நேரமாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

உடற்தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியுடன் 6/9 மற்றும் 6/12 என்ற அளவிலும், கண்ணாடியின்றி 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் போன்ற பாதிப்புகள் இருக்கக்கூடாது. உடல் நலம் மற்றும் உளநலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப் படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 21-2-2019-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விரிவான விவரங்களை www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்