திருப்போரூர் அருகே என்ஜினீயரிங் மாணவரை கொன்று கல்குவாரியில் உடல் வீச்சு
திருப்போரூர் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில் கல்லூரி மாணவரை கொன்று கை, கால் கட்டப்பட்டு கல்குவாரியில் உடல் வீசப்பட்டது.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த காயார் அருகே கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காயார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பிணத்தை மீட்ட னர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனி 11-வது தெருவை சேர்ந்த கார்த்திகேயன் மகன் சரவணன் (வயது 21) என்பதும், தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த 22-ந் தேதி கல்லூரிக்கு சென்ற சரவணன் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் சரவணன் கல்குவாரியில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதுபற்றி விசாரிக்க திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சரவணனின் பெற்றோர் அங்கு வந்து அடையாளம் காட்டினர். இதைத்தொடர்ந்து சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸ் விசாரணையில், சரவணனின் கை, கால் கட்டப்பட்டு, உடலில் கல் வைத்து கட்டி கல்குவாரியில் வீசுவதற்கு முன்னதாக அவரை அடித்தும், தலை, கை, கால் என உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியும் கொலை செய்து இருந்தது தெரியவந்தது.
மாமல்லபுரம் துணை சூப்பிரண்டு சுப்புராஜி, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் கொலைக்கான காரணம் யார்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சரவணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் விவகாரமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.